Sunday, November 27, 2011

போராளியின் மனைவிதைரியாமாக இருப்பதெற்க்கென்றே
நிர்பந்திக்கப்பட்டவள்

அருகிலுள்ள காவல் நிலையங்களுக்கு
அடிக்கடி போய்வர வேண்டியிருக்கும்

கணவனின் நண்பர்கள்
அடிக்கடி பேசும்மளவு
பரிச்சயமிருக்கவேண்டும்

மென்னையானவளாயிருத்தல்
அவ்வளவு உகந்ததல்ல
வன்முறைக்கும் கொஞ்சம்
பழகிக்கொள்ள வேண்டும்

ஒருவேளை காதல்மணம்
புரிந்திருப்பாளாயின்
தற்போது ஏற்படும்
குற்றவுணர்ச்சிக்கும்
சுய இரக்கத்திற்கும்
பதில்தேடி அவ்வப்போது
கோவிலுக்கோ
தத்துவ புத்தகங்களிடமோ
மனநல மருத்துவரிடமோ
செல்ல வேண்டியிருக்கும்

போராளிகள்
தம் மனைவியின் மனதை
புரிந்துகொள்ளவோ
பொருட்படுத்தவோ கூடாது

அதையும் மீறி
அவளின் கண்ணீருக்கு
செவிமடுத்தால்
அவன் திரும்பி வரமுடியா
முழுமையான குடும்பஸ்தனாகிவிடும்
சமுஅபாயம் இருக்கிறது

போராளியாய் இருப்பது
போராளிகளுக்கு எப்போதும்
எளிதாகவே இருக்கிறது

போராளியின் மனைவியாய் இருப்பது
அவ்வளவு எளிதாக இருப்பதில்லை
சமூகப் பார்வை அதிகமுள்ள பெண்ணுக்குக்கூட

Sunday, August 7, 2011

அர்த்தமற்ற கேள்வி…


தன் சொந்தவாழ்வில்
உறவுகளின் அதீத குறுக்கீடுகளின்
அதிர்ச்சியில் உறைந்தபிறகு…

அம்மாவுடனான தொலைபேசி
உறையாடல்கள் சம்பிரதாயங்களுக்குமேல்
நீளமுடியாமல் போனபிறகு…

அவள் பிரியங்களை
முழுமையாய் மறுத்தபிறகு…

அன்பின்மீதும்
கடவுளின்மீதுமான
நம்பிக்கைகள் உடைந்தபிறகு…

எதேட்சையாக நண்பர்களிடமிருந்து
எந்த தொலைபேசி அழைப்பும் வராத
அந்த ஞாயிற்றுக் கிழமைக்குப்பிறகு…

முடிவேயில்லாத விடுதி வாழ்க்கையின்
தனிமையில் தவறாமல் வந்துவிடுகிறது...

இந்த வாழ்க்கைக்கு ஏதேனும் அர்த்தம் உள்ளதா
என்ற அர்த்தமற்ற கேள்வி…

Friday, June 10, 2011

குழப்பங்கள் தெளியும்போது...
குழந்தைகளுக்கு நாம்தாம்
முத்தமிடக் கற்றுத் தந்தோம்…

குழந்தைகளுக்கு நாம்தாம்
கட்டித்தழுவக் கற்றுத் தந்தோம்…

குழந்தைகளுக்கு நாம்தாம்
கூடி விளையாடக் கற்றுத் தந்தோம்…

குழந்தைகளோ திடீரென வளர்ந்துவிடுகின்றனர்
நாமும் திடீரென கட்டுப்பாடுகள் விதிக்கின்றோம்…

குழம்புகின்றன
சற்றே வளர்ந்த குழந்தைகள்
என்னாகிவிட்டதென…

குழப்பங்கள் தெளியும்போது
குழந்தைகள் குழந்தைகளாய் இருப்பதில்லை…

Thursday, May 26, 2011

அன்புள்ள அப்பத்தா...

 அன்புள்ள அப்பத்தா,
    
     என்னை இன்னும் ஞாபகம் இருக்கிறதா… உன் ஞாபகத்திரைகள் எப்போதோ கிழிந்துவிட்டதாய் வீட்டில் எல்லோரும் சொல்கிறார்கள். அது இருந்ததற்க்கான அடையாளமாய் சில இழைகள் மட்டும் சலசலக்கின்றனவாம்… எப்போதாவது உன் முனகல்களில் அதிகம் என் பெயரை உச்சரிக்கிறாயாமே… உன் கடைசிக் காலங்களில் நீ தேடும் மனிதனாக இருக்குமளவு எனக்கு என்ன தகுதி இருக்கிறது. நான் உன்னை சந்திக்கும் சொற்ப அவகாசங்களில் உன்னிடம் நன்றாக பேசுவேன். முடிந்தவரை உன் வயதை மறந்து சிரிக்கச் செய்வேன். அவ்வளவே. என் வாழ்வை தேடிய ஓயாத பயணங்களில் உனக்காக வேறென்ன செய்ய முடிந்திருக்கிறது...

     அன்று ஒரு நாள் தாத்தா இறந்து ஒரு மாதம் கழித்து என்று நினைக்கிறேன். உன்னுடைய துணிப் பையை எடுத்து பிரிக்கச்சொன்னாய். அதில் எனக்கு தருவதற்க்கு ஏதாவது கிடைக்குமா என்று தேடிக்கொண்டிருந்தாய். அதில் ஆறு புடவைகள், அதைவிட சில அதிக எண்ணிக்கையில் சில ஜாக்கெட்டுகள், பாவாடைகள், இரண்டு துண்டு, மற்றும் ஒரு சால்வை மட்டுமே இருந்தன. அதிலிருந்து எனக்கு தருவதற்க்கான திருப்தியான ஒன்றை உன்னால் தேர்ந்தெடுக்கமுடியவில்லை. கடைசியாய் ஒரு துண்டை எடுத்து என்னிடம் கொடுத்தாய். நானும் அது எனக்கு மிகவும் தேவையான ஒன்று என்பதுபோல் வாங்கிவைத்துக்கொண்டேன். அன்று இரவு எனக்கு தூக்கமே வரவில்லை அப்பத்தா… நீ எவ்வளவு பெரு வாழ்வு வாழ்ந்திருக்க வேண்டும். வாலிப வயதில் இறந்துபோன உன் கடைசி மகனையும் சேர்த்து மூன்று ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தையை பெற்ற தாயல்லவா நீ… தாத்தா இறந்தபிறகு உன் வாழ்க்கை ஒரு சிறு துணிப்பையில் சிறுத்துப்போகும் அளவு எப்படி கவனமின்றி இருந்துவிட்டாய்… அந்த காலத்து கணவனுக்கு மனைவியாக மட்டுமே வாழ்ந்திருக்கிறாய். உனக்கென்று ஒரு நாளாவது வாழ்ந்திருக்கிறாயா.

     நீ காலங்களை கணிக்கும் முறை வித்யாசமானது. நான் கடிகாரம் பார்க்கவும் ஆங்கில மாதங்களை உனக்கு கற்றுத்தர முயன்றும் தோல்வியுற்று இருக்கிறேன். ஆனாலும் உன் ஞாபகத் திறனையும் கணித அறிவையும் உன் கால அளவீட்டில் மிக திறமையாய் பயன்படுத்துவாய். அதை நான் உறவுக் கடிகாரம் என்று எனக்குள் அழைத்துக்கொள்வேன். கடைசியாக உனக்கு பிடித்தமானவர்கள் வந்து போன நாளிலிருந்து எத்தனை நாள் ஆகிவிட்டது என்பதை சரியாகச் சொல்வாய். அது மட்டுமன்றி வரப் போகும் அடுத்த முக்கிய விசேசங்கள் அல்லது நீ எதிர் பார்க்கும் நபர் வருவதாக சொன்ன நாளுக்கு எத்தனை நாள் உள்ளது போன்ற விபரங்களை மனதின் நுனியில் வைத்திருப்பாய். கடிகாரம் பார்க்கத்தெரியாவிட்டாலும் அவ்வப்போது நேரம் யாரிடமாவது கேட்டுத் தெரிந்துகொள்வாய்.

      உன்னிடம் சில விசித்திர குணங்கள் உண்டு. உனக்கு சாப்பிட கொடுக்கும்போது அதில் கொஞ்சம் சிறப்பான உணவு வகை ஏதேனும் இருந்தால் அதை வேண்டாம் என்று சொல்லி விடுவாய். பிறகு அது நிறைய இருக்கிறது என்று சொல்லி வற்புறுத்திதான் உன்னை சாப்பிட வைக்கவேண்டும். சுடுசாத்த்தைவிட பழைய சாதத்தை நீ அதிகம் விரும்புவாய். உனக்குள் ஒரு ரகசிய கொள்கை உண்டு. யாருக்கும் அதிகம் தேவையல்லாத உணவே உனக்கு தேவையான ஒன்றாக இருந்தது. உன் தாழ்வுமனப்பான்னையை எங்களால் சரிசெய்ய முடியாமல் இருந்தது. உனக்காகவே பழைய சாதம் வேண்டுமென்றே செய்து வைப்பதும் உண்டு.
     நீ படித்த படுக்கையாய் ஆவதற்கு முன்புவரை பாத்திரம் கழுவும் வேலையை பிடிவாதமாய் செய்து கொண்டிருந்தாய். அம்மாவிற்கு அதில் கொஞ்சமும் உடன்பாடில்லை அதனால் அதிகம் தண்ணீர் செலவாகிறதென்றும் உனக்கு கண்பார்வை குறைந்ததால் அந்த வேலையை அவ்வளவு சுத்தமாய் செய்வதில்லை என்றும் வயசான காலத்தில் சொன்னால் கேட்க மாட்டேன்கிறாய் என்று அடிக்கடி குறைபட்டுக் கொள்வாள். ஆனாலும் இதெல்லாம் நீ உன் திருப்திக்காக செய்கிறாய் என்பதால் இந்த விசயத்தில் அம்மாவின் புலம்பலை வீட்டில் யாரும் கண்டிகொள்வதில்லை.

      கண்கள்தான் உனக்கு சரியா தெரியாது. காட்ராக்ட் அறுவைசிகிச்சைக்கு பயந்து நீ ஒத்துழைக்க மறுத்து விட்டாய். ஆனால் காது உன்க்கு மிக துல்லியம். எவ்வளவு மிதமாக பேசினாலும் அதை சரியாக கிரகித்து உபரிதகவல்களை அவ்வப்போது தனியாக என்னிடம் கேட்பாய். ஒரு விசயத்தில் நான் உன்னை கொடுமை படுத்தியிருக்கிறேன். நீ புகையிலை வேண்டுமென்று கெஞ்சுவாய். சரி பரவாயில்லையென வாங்கி கொடுத்தால் அதை வாங்கி சாப்பிட்டுவிட்டு சுயநினைவின்றி மயங்கி கிடப்பாய். அதனால் வீட்டில் மற்றவர்களுக்கு இடர்பாடுகள் ஏற்படுவதால் அதன்பிறகு புகையிலை வாங்கி தருவதில்லை. இன்னமும் புகையிலை போடும் விருப்பம் இருந்துகொன்டேதான் இருக்கிறது.

     நீ ஒரு வருடம் இங்கே அம்மா அப்பாவிடமும் ஒரு வருடம் சித்தப்பா சித்தியிடமும் மாறி மாறி பராமரிப்பதாக ஒரு ஒப்பந்தம் இருக்கிறது. உனக்கு இங்கு இருப்பதில்தான் அதிகம் விருப்பம். இப்போது உனக்கு நினைவு தப்பி விட்டது. உன்னுடை விருப்பு வெறுப்பு பற்றியெல்லாம் உனக்கு பிரக்ஞையே இல்லை. இப்போது நீ சித்தப்பா வீட்டில் இருக்கிறாய். இங்கு கடைபிடிக்கும் ஒழுங்குகள் எத்தனையோ எனக்கு ஒழுங்குகளாய் தெரிவதில்லை. என் உதிராத கண்ணீரெல்லாம் கோபமாக மாறிக்கொண்டிருக்கிறது. எனக்கு உறவுகளின்மீதான நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்துகொண்டே வருகிறது. மெது மெதுவாய் என்னை அனாதையாய் உணரத்தொடங்கிவிட்டேன் அப்பத்தா… உறவுகளின் பினைப்புகள் அறுந்துகொண்டு வருவதை, இப்பூமியில் மானுடம் செய்த எத்தனையோ தவறுகளை வேடிக்கை பார்ப்பதுபோல் இதையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறேன். நீ சித்தப்பா வீட்டிக்குச் சென்றதாய் கேள்விப்பட்ட அன்று என் கடைசி காலங்களில் நானாகவே ஒரு முதியோர் இல்லத்திற்கு சென்று விடவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். உன்னை நான் திரும்ப எப்போது பார்ப்பேன் என தெரியவில்லை. உனக்கு உதவ முடியாத்தற்கு மன்னித்துவிடு…

      நீ இறந்தபிறகு அழுது கொண்டாடுவார்கள். எனக்கப்போதெல்லாம் கோபம்தான் வரும். உன் வாழ்வில் உனக்கு உதவ முடியாத நான் சாவிற்கு வந்து என்ன பயன். கடைசியாக ஒரு ரகசிய விருப்பம் உனக்கே தெரியாத ஒரு திடீர் நொடிப்பொழுதில் நீ இறந்துபோவது நிகழவேண்டும் அதுவும் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவில்.

      உன்னிடம் இன்னும் என்னன்னவோ சொல்லனும்போல் இருக்கு, முக்கியமா நான் உணர்வறிந்து வாழ தொடங்கி எத்தனையோ வருடங்களில் தாத்தா இறந்தபிறகான நாட்களில் உன்னை தொட்டு அரவனைத்து, தலையை கோதிவிட்டு, எப்படியாவது சிரிக்கவோ நெகிழவோ வைத்த அந்த சொற்ப தருணங்களையே இதுவரையான வாழ்தலில் மிக முக்கியமான அற்புத தருணங்களாகவே நினைக்கிறேன்…

அன்புடன் சபரிநாதன்.

Saturday, May 21, 2011

அன்பில் ராட்சசி…
அன்பை
மிகசிறந்த
வன்முறை ஆயுதமாய்
லாவகமாய் பயன்படுத்துவதை
அவளிடம் மட்டுமே
பார்க்க முடியும்…

அவள் யாரையும்
தன் அன்பின் வலையில்
விழவைப்பதில்லை…
அவர்களாகவே சென்று
மாட்டிக்கொள்வதுதான்…

தெரியாமல் சிக்கியவர்களையும்
அவளே காப்பாற்றியும் விடுவாள்…
அதையும்மீறி அவளது
அன்பில் விழுவது
அவ்வளவு எளிதல்ல…

அவளின் அன்பில்
விழுந்தபின் அவனுக்கு
இரண்டே வாய்ப்புகள்
மட்டுமே இருந்தன…

ஒன்று
அவளது அன்பின் அடிமையாய்
ஒரு வாழ்வை வாழவேண்டும்…
அல்லது
அவளது அன்பிற்காக ஏங்கியே
ஒரு வாழ்வை துறக்க வேண்டும்…

அவள்
அன்பை வன்முறையாய்
அவன்மீது பிரயோகிக்கும்போது
எந்த ஒரு புறக்கணிப்பையும்
அவன் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்…
தரப்படும் எந்த ஒரு தண்டனையையும்
அவன் கேள்வி கேட்காமல் பெற்றுக்கொள்ளத்தான் வேண்டும்…
அவன் காதுகளால் கேட்கவே முடியாத
நம்பவே முடியாத அவளது பொய்களையும்
மறுக்காமல் நம்பத்தான் வேண்டும்…

எல்லோருக்கும்
அன்பின் மழைதான் அவள்…

அவனிடம் மட்டும்
அவள் காட்டும்
அன்பில் ராட்சசி…Tuesday, May 10, 2011

தேவதை காலங்கள்…ஒவ்வொருவருக்கும்
எப்போது தொடங்குகிறதென்று
துல்லியமாய் தெரிவதில்லை…

சிலருக்கு பதினாறின் தொடக்கத்திலோ
அல்ல பின்வரும் சில வருடங்களிலோ
ஒரு ஆசிர்வதிக்கப்பட்ட நாளில்
துவங்குகிறது…

ஆரம்பத்தில்
கொஞ்சம் தயக்கங்களும்
பயங்களும் இருந்தாலும்
பின் அதிசயிக்கிறாள்
தேவதை காலங்கள்
தொடங்கியது கண்டு…

ஆண்களின் உலகிற்கு
தானே அச்சாணியாய் இருப்பது
அவளுக்கு சந்தோஷமாய் இருக்கிறது…

செல்லுமிடமெல்லாம்
அவளுக்கொரு முக்கியத்துவம்
கிடைக்கிறது…

அதை
பலமுறை அவளாகவே
பரிசோதனை செய்து
உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறாள்…

அவள் சராசரி பெண்ணல்ல என்றும்
அவளிடம் ஏதோவொரு விஷேச தன்மை உள்ளதென்றும்
அவளால் உணரமுடிந்தது…

அந்த உண்மையை
அவளைத் தேடிவந்த
அவள் மறுத்த
பதிமூன்று காதல் விருப்பங்கள்
உறுதிப்படுத்தின…

அவளைத் தேடிவந்த
ஒவ்வொரு காதலையும்
அவள் விளையாட்டாகவே
எதிர்கொண்டாள்…

எந்த ஒரு அன்பையும்
புறக்கணிக்க மனமில்லையெனினும்
எல்லாவற்றையும்
புறக்கணிக்கவே செய்தாள்…

எல்லா காதலையும்
அவள் நியாயமான காரணத்திற்க்காகவே
மறுத்தாள்…

சிலருக்கு தகுதியில்லை…
சிலரை அவளுக்கு பிடிக்கவில்லை…
சிலரை பிடித்திருந்தும் சமூக காரணங்களால் ஏற்க முடியவில்லை…
சிலரிடம் போதுமான பொறுமையில்லை… அவசரப்பட்டார்கள்…
சிலர் மறுத்ததால் அவளை காயப்படுத்தினார்கள்…
சிலரோ மறுத்தபிறகும் அவளைத் தொந்தரவு செய்து நோகடித்தனர்…

பிடித்த காதலை ஏற்கமுடியாதபோதும்
பிடிக்காத காதலை மறுத்தபோதும்கூட
அவளுக்கு வருத்தமாகவே இருந்தது…

அவளிடம் வந்த எல்லா காதலையும்
அவள் மென்மையாகவே நடத்தினாள்
அதுவே அவளுக்கு மிகவும் தொல்லையாக இருந்தது…

அவள் காதலை மறுக்கும்போது
யாருமே அதை முழுமையாய்
நம்பவில்லை…

நம்பும்படியாக
மனதை கஷ்டப்படுத்தாது
காதலை எப்படி மறுப்பதென்பது
கடைசிவரைக்கும்
அவளுக்குத் தெரியவேயில்லை…

ஒவ்வொரு காதலிலிருந்தும்
தப்பிச் செல்வதை
வேதனை அனுபவமாகவே
உணர்ந்தாள்…

காதலை நல்லனுபவமாய் அவளுக்குத் தர
எந்த ஒரு தேவகுமாரனாலும் முடியவில்லை…

அவள் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள்
எப்போது முடியும் ‘அவளது தேவதை காலங்கள்’ என…

அவளுக்கு மிகவும் அயர்ச்சியாய் இருந்தது
அவளது தேவதை காலங்கள்…

Tuesday, March 1, 2011

நினைக்காத பொழுதுகள்…


என்
அலுவல்களின்
சிந்தனையில்
சில கணப்பொழுதுகள்…

கனவில் நீ
வராத உறக்கத்தின்
சில கணப்பொழுதுகள்…

தியானத்தின்
ஆழ்ந்த
அமைதியில்
சில கணப்பொழுதுகள்…

நட்பின்
கேளிக்கை
உற்சாகத்தின்
சில கணப்பொழுதுகள்…

இப்படியாக
மிக அரிதாக
உன்னை
நினைக்காத
சில கணப்பொழுதுகள்
என் வாழ்தலில்
இருந்ததுண்டு…

அவையெல்லாம்
ஒன்றாக சேர்ந்துவந்து
என்னிடம் கெஞ்சுகின்றன…
உனதன்பில் நான் மகிழும்
கணப்பொழுதுகளாக
மறுவாழ்வு பெற
வேண்டுமென்று…

அந்த
வரத்தை
நீதானே
தரவேண்டும்…

Sunday, February 27, 2011

பழைய தோழியிடம் சில எளிய வேண்டுகோள்கள்…


உரிமையல்லாதவனாயினும்
குறைந்தபட்ச உரிமையில் கேட்கிறேன்….

நாம் இருவருமே ஒரே ஊரில் இருந்தாலும்
நான் வரும் பாதைகளில் அதிகம் வராதே…
உன்னை தவிர்ப்பதென்பது
என்னையே நான் தண்டித்துக் கொள்(ல்)வதைப் போலுள்ளது….

நான் ஓய்வெடுக்கும் தோட்டத்தில்
நீயும் பொழுது போக்காதே…
நீ ஒருமுறை வந்துபோனபிறகு
பொதுவிடமான அது உன்னுடைய தோட்டமாகிவிட்டது…

கொஞ்ச நாட்கள் அன்பைப்பற்றி பொதுவாகக்கூட
எந்த கருத்தும் சொல்ல வேண்டாம்…
என்னைப்ற்றி சொல்வதுபோல்
தோற்ற மயக்கங்கள் ஏற்படுகின்றன…

மிக முக்கியமாக…

உனக்கு பதிலாக சமூக வலைதளங்களில் நீ பயன்படித்தும்
அந்த சிரிக்கும் குழந்தைப் படத்தை தயவுசெய்து மாற்றிவிடு
அது உன்னையும்விட அதிகம் என்னை தொந்தரவு செய்கிறது…

என் அளவில் நீயும்
உன் அளவில் நானும்
இதயத்தின் சொல்பேச்சுகூட கேட்கா
சிறு குழந்தைகள்தானே
உனக்கு தெரியாதா…Sunday, February 13, 2011

பிரியமானவர்களிடம்….நிகழ்வுகளை கட்டுப்படுத்த இயலாதபோது
நம்பிக்கை தகர்கிறபோது
துரோகங்களை எதிர்கொள்ளும்போது
புறக்கணிப்பை தாங்கமுடியாதபோது
ஏற்க்கச் செய்தலில் தோற்கிறபோது
பொய்களை உணரும்போது
கோபங்கள் தோன்றுகின்றன
பிரியமானவர்களிடம்…

அன்பு சிறு புள்ளியில் தொடங்கி முழுமையாய் ஆக்கிரமிப்பதிப்போல்
கோபங்கள் விஸ்வரூபமாய் உருவாகி புள்ளியாய் சிறுக்கிறது
பிரியமானவர்களிடம்…

அடர்தல் அன்பின் இயல்பென்றால்
நீர்த்தல் கோபத்தின் இயல்பு
பிரியமானவர்களிடம்…

கோபங்கள் அன்பின் தலைகிழி
பிரியமானவர்களிடம்…

Tuesday, January 25, 2011

சரியாகத்தான் நடக்கின்றன…


அனாதைகள் உருவாக்கப்படுகிறார்கள்
சமூகத்தின் கருவறைகளில்…

அகதிகள் துரத்தப்படுகிறார்கள்
பிறந்த மண்ணிலிருந்து…

பைத்தியங்கள் ஆக்கப்படுகிறார்கள்
வேசங்களை மறுப்பவர்கள்…

விலைமகள்கள் வாங்கப்படுகிறார்கள்
வீதிகளின் விளிம்புகளில்...

காதல் கைவிடப்படுகின்றன
திருமணத்திற்கு முன்போ அல்ல பிறகோ….

புரட்சியாளர்கள் சீர்திருத்தத்தைப் பற்றியும்
மததூதர்கள் நம்மிக்கையைப் பற்றியும்
ஓயாது பேசிக்கொண்டிருக்கின்றனர்…

புறக்கணிக்கப்பட்ட அன்பின் கல்லறைகளின்மேலே
ஆயிரமாயிரம் கோவில்களைக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள்…

கடவுள் இருப்பதாய் நம்பிக்கொண்டிருக்கும் இவ்வுலகில்…

அன்பிற்க்கான சிறுமுயற்சியைத் தவிர
எல்லாம் இங்கு சரியாகத்தான் நடக்கின்றன…


Sunday, November 14, 2010

உடையும் தருணங்களில்…ஒரு பெண் உடையும் தருணங்களில்…
கேவல் செய்கிறாள்…
கண்ணீர் விடுகிறாள்…
மிகவும் நெருக்கமானவர்களின்
அருகில் இருந்தால்,
அவர்களின் கைகளை பற்றிக்கொள்கிறாள்…
தோளிலோ, மடியிலோ சாய்ந்து கொள்கிறாள்…
சிலநேரம் கோபமடைகிறாள்…
சாபமிடுகிறாள்…
சபதமிடுகிறாள்…

மிக அழுத்தமானவர்களுக்குக்கூட
நீர்திரை விழுந்துவிடுகிறது கண்களில்…
எப்படியேனும் தனது பாரங்களை
கொஞ்சமேனும் கசிந்துவிடுகிறாள்…

ஒரு ஆண் உடையும் தருணங்களை
எப்படி எதிர்கொள்கிறான்…
மிக இயல்பாக இருக்க
முயற்சி செய்கிறான்…
புகைக்கும் பழக்கமுள்ளவன்
சிகரட்டை பற்ற வைக்கிறான்…
கைபேசியை எடுத்து
எதோ செய்கிறான்…
முடிந்தவரை எல்லாருடைய கண்களையும்
தவிர்த்து விடுகிறான்…
அங்கிருந்து அவசரமாக
அகன்று செல்கிறான்…
அந்த கணங்கள்
அதன் ஆறாத ரணங்களோடு
நதிகளுக்கு அடியிலோ,
ஆழ்கடலினுள்ளோ
மிக ரகசியமாக ஒளித்து வைக்கப்படுகிறது…
கொஞ்சம் ரோசமுள்ளவர்கள்
தனது சாதனை கோபுரங்களை எழுப்பி
அதனடியில் மறைத்து விடுகின்றனர்…

எப்படியும் யாரும் அறியா
மர்மமாகவே இருந்துவிடுகின்றது
ஆண் சிந்தாத கண்ணீர்
நம் எல்லோரிடமிருந்தும்…

Friday, November 12, 2010

காவல்வேண்டுதலுக்கு
பலியிடப்படும்
ஆடுகளின்
கடைசி நிமிட
கதறல் வேண்டுதல்
ஏன் கேட்பதில்லை
காவல் தெய்வங்களுக்கு…

Monday, July 5, 2010

மன்னித்து விடலாம்


சவம் கிடத்தியிருக்கும் வீட்டில்
கூச்சலிட்டு விளையாடும் குழந்தைகளை…

எவ்வளவோமுறை சொல்லியும்
ரகசியங்களை உலறிவிடும் மனைவியை…

திடீர் வெற்றிடத்தை உருவாக்கி
தனிமையை உணரவைத்த
சமீபத்தில் காதலில் விழுந்த நண்பனை…

இன்னும் சிறுபிள்ளையாய் எண்ணி
அறிவுரை சொல்லிக்கொண்டிருக்கும் அப்பாவை…

அன்பை ஏற்க மறுத்து
பிரிந்து சென்ற காதலியை…

என் சாவிற்கு எங்கிருந்தாலும் வந்துவிடவேண்டும்
என்று பயமுறுத்தும் அம்மாவை…

என எல்லோரையும்
மன்னித்து விடலாம்…

பாவம் அவர்கள்
தான் இன்ன தவறு செய்கிறோம் என்று
அறியாமல் செய்கிறார்கள்…

Sunday, June 27, 2010

எனது கவிதைகள்எனது கவிதைகள்
உங்களை வருத்தப்படுத்துகிறது
நம்பிக்கையிழக்கச் செய்கிறது
பயமூட்டுகிறது
குற்றவுணர்வடையச் செய்கிறது
என்கிறீர்கள்…

தன்னைப்பற்றி எழுதியதாக
கோபப்படுகிறான்
நெருங்கிய நண்பனொருவன்…

அழகியல் உலகைப்பற்றி
உனக்கு எதுவுமே தெரியாதா?
என்று கேட்கிறாள்
தோழியொருவள்…

உங்களுக்கு போதையூட்டும்
ஒரேஒரு கவிதைகூட
என்னால் எழுதமுடியவில்லையே…

Monday, June 21, 2010

செம்மொழிஇரண்டு லட்சம்
மனிதர்கள் சாவதற்கு
ஒரே காரணமாயிருந்த
மொழி…

ஆறரை கோடி
இதயமில்லாதவர்கள்
பேசும்
மொழி…

செம்மொழியாக
இல்லாவிட்டால்
என்ன குறைந்துவிடப்போகிடறது….

Saturday, June 19, 2010

வாழும் கலை


பொது இடங்களில் யாரரேனும்
குழந்தைகளை அடிக்கும்போது
முகத்தை திருப்பிக் கொள்ளுங்கள்
பார்க்காததுபோல்…

வயதான முதாட்டி பிச்சை கேட்டால்
கையில் அகப்படும் சில்லரை நாணயத்தை தந்துவிட்டு
அங்கிருந்து வேகமாக
சென்றுவிடுங்கள்…

வேறு வழியேயில்லாமல்
கடைசியாய் லஞ்சம்
கொடுத்ததுபற்றி
யாரிடமும் சொல்லிக்கொள்ள வேண்டாம்…

விபத்துக்கள்
கற்பழிப்பு
அரசியல்
செய்திகளை தவிர்த்துவிடுங்கள்
வாசிப்பிலிருந்து…

முடிந்தவரை தப்பிச் செல்லுங்கள்
கையருநிலையில் வாழ்தலின்
குற்றவுணர்விலிருந்து…

Tuesday, June 23, 2009

Saturday, June 20, 2009

welcome

அன்புள்ள நண்பர்களே

நம் இருப்பை பதிவு செய்து கொண்டிருப்பதே அன்றி விளம்பரமில்லை