Sunday, February 27, 2011

பழைய தோழியிடம் சில எளிய வேண்டுகோள்கள்…


உரிமையல்லாதவனாயினும்
குறைந்தபட்ச உரிமையில் கேட்கிறேன்….

நாம் இருவருமே ஒரே ஊரில் இருந்தாலும்
நான் வரும் பாதைகளில் அதிகம் வராதே…
உன்னை தவிர்ப்பதென்பது
என்னையே நான் தண்டித்துக் கொள்(ல்)வதைப் போலுள்ளது….

நான் ஓய்வெடுக்கும் தோட்டத்தில்
நீயும் பொழுது போக்காதே…
நீ ஒருமுறை வந்துபோனபிறகு
பொதுவிடமான அது உன்னுடைய தோட்டமாகிவிட்டது…

கொஞ்ச நாட்கள் அன்பைப்பற்றி பொதுவாகக்கூட
எந்த கருத்தும் சொல்ல வேண்டாம்…
என்னைப்ற்றி சொல்வதுபோல்
தோற்ற மயக்கங்கள் ஏற்படுகின்றன…

மிக முக்கியமாக…

உனக்கு பதிலாக சமூக வலைதளங்களில் நீ பயன்படித்தும்
அந்த சிரிக்கும் குழந்தைப் படத்தை தயவுசெய்து மாற்றிவிடு
அது உன்னையும்விட அதிகம் என்னை தொந்தரவு செய்கிறது…

என் அளவில் நீயும்
உன் அளவில் நானும்
இதயத்தின் சொல்பேச்சுகூட கேட்கா
சிறு குழந்தைகள்தானே
உனக்கு தெரியாதா…



Sunday, February 13, 2011

பிரியமானவர்களிடம்….



நிகழ்வுகளை கட்டுப்படுத்த இயலாதபோது
நம்பிக்கை தகர்கிறபோது
துரோகங்களை எதிர்கொள்ளும்போது
புறக்கணிப்பை தாங்கமுடியாதபோது
ஏற்க்கச் செய்தலில் தோற்கிறபோது
பொய்களை உணரும்போது
கோபங்கள் தோன்றுகின்றன
பிரியமானவர்களிடம்…

அன்பு சிறு புள்ளியில் தொடங்கி முழுமையாய் ஆக்கிரமிப்பதிப்போல்
கோபங்கள் விஸ்வரூபமாய் உருவாகி புள்ளியாய் சிறுக்கிறது
பிரியமானவர்களிடம்…

அடர்தல் அன்பின் இயல்பென்றால்
நீர்த்தல் கோபத்தின் இயல்பு
பிரியமானவர்களிடம்…

கோபங்கள் அன்பின் தலைகிழி
பிரியமானவர்களிடம்…