Sunday, November 14, 2010

உடையும் தருணங்களில்…



ஒரு பெண் உடையும் தருணங்களில்…
கேவல் செய்கிறாள்…
கண்ணீர் விடுகிறாள்…
மிகவும் நெருக்கமானவர்களின்
அருகில் இருந்தால்,
அவர்களின் கைகளை பற்றிக்கொள்கிறாள்…
தோளிலோ, மடியிலோ சாய்ந்து கொள்கிறாள்…
சிலநேரம் கோபமடைகிறாள்…
சாபமிடுகிறாள்…
சபதமிடுகிறாள்…

மிக அழுத்தமானவர்களுக்குக்கூட
நீர்திரை விழுந்துவிடுகிறது கண்களில்…
எப்படியேனும் தனது பாரங்களை
கொஞ்சமேனும் கசிந்துவிடுகிறாள்…

ஒரு ஆண் உடையும் தருணங்களை
எப்படி எதிர்கொள்கிறான்…
மிக இயல்பாக இருக்க
முயற்சி செய்கிறான்…
புகைக்கும் பழக்கமுள்ளவன்
சிகரட்டை பற்ற வைக்கிறான்…
கைபேசியை எடுத்து
எதோ செய்கிறான்…
முடிந்தவரை எல்லாருடைய கண்களையும்
தவிர்த்து விடுகிறான்…
அங்கிருந்து அவசரமாக
அகன்று செல்கிறான்…
அந்த கணங்கள்
அதன் ஆறாத ரணங்களோடு
நதிகளுக்கு அடியிலோ,
ஆழ்கடலினுள்ளோ
மிக ரகசியமாக ஒளித்து வைக்கப்படுகிறது…
கொஞ்சம் ரோசமுள்ளவர்கள்
தனது சாதனை கோபுரங்களை எழுப்பி
அதனடியில் மறைத்து விடுகின்றனர்…

எப்படியும் யாரும் அறியா
மர்மமாகவே இருந்துவிடுகின்றது
ஆண் சிந்தாத கண்ணீர்
நம் எல்லோரிடமிருந்தும்…

Friday, November 12, 2010

காவல்



வேண்டுதலுக்கு
பலியிடப்படும்
ஆடுகளின்
கடைசி நிமிட
கதறல் வேண்டுதல்
ஏன் கேட்பதில்லை
காவல் தெய்வங்களுக்கு…

Monday, July 5, 2010

மன்னித்து விடலாம்


சவம் கிடத்தியிருக்கும் வீட்டில்
கூச்சலிட்டு விளையாடும் குழந்தைகளை…

எவ்வளவோமுறை சொல்லியும்
ரகசியங்களை உலறிவிடும் மனைவியை…

திடீர் வெற்றிடத்தை உருவாக்கி
தனிமையை உணரவைத்த
சமீபத்தில் காதலில் விழுந்த நண்பனை…

இன்னும் சிறுபிள்ளையாய் எண்ணி
அறிவுரை சொல்லிக்கொண்டிருக்கும் அப்பாவை…

அன்பை ஏற்க மறுத்து
பிரிந்து சென்ற காதலியை…

என் சாவிற்கு எங்கிருந்தாலும் வந்துவிடவேண்டும்
என்று பயமுறுத்தும் அம்மாவை…

என எல்லோரையும்
மன்னித்து விடலாம்…

பாவம் அவர்கள்
தான் இன்ன தவறு செய்கிறோம் என்று
அறியாமல் செய்கிறார்கள்…

Sunday, June 27, 2010

எனது கவிதைகள்























எனது கவிதைகள்
உங்களை வருத்தப்படுத்துகிறது
நம்பிக்கையிழக்கச் செய்கிறது
பயமூட்டுகிறது
குற்றவுணர்வடையச் செய்கிறது
என்கிறீர்கள்…

தன்னைப்பற்றி எழுதியதாக
கோபப்படுகிறான்
நெருங்கிய நண்பனொருவன்…

அழகியல் உலகைப்பற்றி
உனக்கு எதுவுமே தெரியாதா?
என்று கேட்கிறாள்
தோழியொருவள்…

உங்களுக்கு போதையூட்டும்
ஒரேஒரு கவிதைகூட
என்னால் எழுதமுடியவில்லையே…

Monday, June 21, 2010

செம்மொழி



இரண்டு லட்சம்
மனிதர்கள் சாவதற்கு
ஒரே காரணமாயிருந்த
மொழி…

ஆறரை கோடி
இதயமில்லாதவர்கள்
பேசும்
மொழி…

செம்மொழியாக
இல்லாவிட்டால்
என்ன குறைந்துவிடப்போகிடறது….

Saturday, June 19, 2010

வாழும் கலை


பொது இடங்களில் யாரரேனும்
குழந்தைகளை அடிக்கும்போது
முகத்தை திருப்பிக் கொள்ளுங்கள்
பார்க்காததுபோல்…

வயதான முதாட்டி பிச்சை கேட்டால்
கையில் அகப்படும் சில்லரை நாணயத்தை தந்துவிட்டு
அங்கிருந்து வேகமாக
சென்றுவிடுங்கள்…

வேறு வழியேயில்லாமல்
கடைசியாய் லஞ்சம்
கொடுத்ததுபற்றி
யாரிடமும் சொல்லிக்கொள்ள வேண்டாம்…

விபத்துக்கள்
கற்பழிப்பு
அரசியல்
செய்திகளை தவிர்த்துவிடுங்கள்
வாசிப்பிலிருந்து…

முடிந்தவரை தப்பிச் செல்லுங்கள்
கையருநிலையில் வாழ்தலின்
குற்றவுணர்விலிருந்து…