Sunday, November 14, 2010

உடையும் தருணங்களில்…



ஒரு பெண் உடையும் தருணங்களில்…
கேவல் செய்கிறாள்…
கண்ணீர் விடுகிறாள்…
மிகவும் நெருக்கமானவர்களின்
அருகில் இருந்தால்,
அவர்களின் கைகளை பற்றிக்கொள்கிறாள்…
தோளிலோ, மடியிலோ சாய்ந்து கொள்கிறாள்…
சிலநேரம் கோபமடைகிறாள்…
சாபமிடுகிறாள்…
சபதமிடுகிறாள்…

மிக அழுத்தமானவர்களுக்குக்கூட
நீர்திரை விழுந்துவிடுகிறது கண்களில்…
எப்படியேனும் தனது பாரங்களை
கொஞ்சமேனும் கசிந்துவிடுகிறாள்…

ஒரு ஆண் உடையும் தருணங்களை
எப்படி எதிர்கொள்கிறான்…
மிக இயல்பாக இருக்க
முயற்சி செய்கிறான்…
புகைக்கும் பழக்கமுள்ளவன்
சிகரட்டை பற்ற வைக்கிறான்…
கைபேசியை எடுத்து
எதோ செய்கிறான்…
முடிந்தவரை எல்லாருடைய கண்களையும்
தவிர்த்து விடுகிறான்…
அங்கிருந்து அவசரமாக
அகன்று செல்கிறான்…
அந்த கணங்கள்
அதன் ஆறாத ரணங்களோடு
நதிகளுக்கு அடியிலோ,
ஆழ்கடலினுள்ளோ
மிக ரகசியமாக ஒளித்து வைக்கப்படுகிறது…
கொஞ்சம் ரோசமுள்ளவர்கள்
தனது சாதனை கோபுரங்களை எழுப்பி
அதனடியில் மறைத்து விடுகின்றனர்…

எப்படியும் யாரும் அறியா
மர்மமாகவே இருந்துவிடுகின்றது
ஆண் சிந்தாத கண்ணீர்
நம் எல்லோரிடமிருந்தும்…