Sunday, June 27, 2010

எனது கவிதைகள்























எனது கவிதைகள்
உங்களை வருத்தப்படுத்துகிறது
நம்பிக்கையிழக்கச் செய்கிறது
பயமூட்டுகிறது
குற்றவுணர்வடையச் செய்கிறது
என்கிறீர்கள்…

தன்னைப்பற்றி எழுதியதாக
கோபப்படுகிறான்
நெருங்கிய நண்பனொருவன்…

அழகியல் உலகைப்பற்றி
உனக்கு எதுவுமே தெரியாதா?
என்று கேட்கிறாள்
தோழியொருவள்…

உங்களுக்கு போதையூட்டும்
ஒரேஒரு கவிதைகூட
என்னால் எழுதமுடியவில்லையே…

Monday, June 21, 2010

செம்மொழி



இரண்டு லட்சம்
மனிதர்கள் சாவதற்கு
ஒரே காரணமாயிருந்த
மொழி…

ஆறரை கோடி
இதயமில்லாதவர்கள்
பேசும்
மொழி…

செம்மொழியாக
இல்லாவிட்டால்
என்ன குறைந்துவிடப்போகிடறது….

Saturday, June 19, 2010

வாழும் கலை


பொது இடங்களில் யாரரேனும்
குழந்தைகளை அடிக்கும்போது
முகத்தை திருப்பிக் கொள்ளுங்கள்
பார்க்காததுபோல்…

வயதான முதாட்டி பிச்சை கேட்டால்
கையில் அகப்படும் சில்லரை நாணயத்தை தந்துவிட்டு
அங்கிருந்து வேகமாக
சென்றுவிடுங்கள்…

வேறு வழியேயில்லாமல்
கடைசியாய் லஞ்சம்
கொடுத்ததுபற்றி
யாரிடமும் சொல்லிக்கொள்ள வேண்டாம்…

விபத்துக்கள்
கற்பழிப்பு
அரசியல்
செய்திகளை தவிர்த்துவிடுங்கள்
வாசிப்பிலிருந்து…

முடிந்தவரை தப்பிச் செல்லுங்கள்
கையருநிலையில் வாழ்தலின்
குற்றவுணர்விலிருந்து…