Thursday, May 26, 2011

அன்புள்ள அப்பத்தா...

 அன்புள்ள அப்பத்தா,
    
     என்னை இன்னும் ஞாபகம் இருக்கிறதா… உன் ஞாபகத்திரைகள் எப்போதோ கிழிந்துவிட்டதாய் வீட்டில் எல்லோரும் சொல்கிறார்கள். அது இருந்ததற்க்கான அடையாளமாய் சில இழைகள் மட்டும் சலசலக்கின்றனவாம்… எப்போதாவது உன் முனகல்களில் அதிகம் என் பெயரை உச்சரிக்கிறாயாமே… உன் கடைசிக் காலங்களில் நீ தேடும் மனிதனாக இருக்குமளவு எனக்கு என்ன தகுதி இருக்கிறது. நான் உன்னை சந்திக்கும் சொற்ப அவகாசங்களில் உன்னிடம் நன்றாக பேசுவேன். முடிந்தவரை உன் வயதை மறந்து சிரிக்கச் செய்வேன். அவ்வளவே. என் வாழ்வை தேடிய ஓயாத பயணங்களில் உனக்காக வேறென்ன செய்ய முடிந்திருக்கிறது...

     அன்று ஒரு நாள் தாத்தா இறந்து ஒரு மாதம் கழித்து என்று நினைக்கிறேன். உன்னுடைய துணிப் பையை எடுத்து பிரிக்கச்சொன்னாய். அதில் எனக்கு தருவதற்க்கு ஏதாவது கிடைக்குமா என்று தேடிக்கொண்டிருந்தாய். அதில் ஆறு புடவைகள், அதைவிட சில அதிக எண்ணிக்கையில் சில ஜாக்கெட்டுகள், பாவாடைகள், இரண்டு துண்டு, மற்றும் ஒரு சால்வை மட்டுமே இருந்தன. அதிலிருந்து எனக்கு தருவதற்க்கான திருப்தியான ஒன்றை உன்னால் தேர்ந்தெடுக்கமுடியவில்லை. கடைசியாய் ஒரு துண்டை எடுத்து என்னிடம் கொடுத்தாய். நானும் அது எனக்கு மிகவும் தேவையான ஒன்று என்பதுபோல் வாங்கிவைத்துக்கொண்டேன். அன்று இரவு எனக்கு தூக்கமே வரவில்லை அப்பத்தா… நீ எவ்வளவு பெரு வாழ்வு வாழ்ந்திருக்க வேண்டும். வாலிப வயதில் இறந்துபோன உன் கடைசி மகனையும் சேர்த்து மூன்று ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தையை பெற்ற தாயல்லவா நீ… தாத்தா இறந்தபிறகு உன் வாழ்க்கை ஒரு சிறு துணிப்பையில் சிறுத்துப்போகும் அளவு எப்படி கவனமின்றி இருந்துவிட்டாய்… அந்த காலத்து கணவனுக்கு மனைவியாக மட்டுமே வாழ்ந்திருக்கிறாய். உனக்கென்று ஒரு நாளாவது வாழ்ந்திருக்கிறாயா.

     நீ காலங்களை கணிக்கும் முறை வித்யாசமானது. நான் கடிகாரம் பார்க்கவும் ஆங்கில மாதங்களை உனக்கு கற்றுத்தர முயன்றும் தோல்வியுற்று இருக்கிறேன். ஆனாலும் உன் ஞாபகத் திறனையும் கணித அறிவையும் உன் கால அளவீட்டில் மிக திறமையாய் பயன்படுத்துவாய். அதை நான் உறவுக் கடிகாரம் என்று எனக்குள் அழைத்துக்கொள்வேன். கடைசியாக உனக்கு பிடித்தமானவர்கள் வந்து போன நாளிலிருந்து எத்தனை நாள் ஆகிவிட்டது என்பதை சரியாகச் சொல்வாய். அது மட்டுமன்றி வரப் போகும் அடுத்த முக்கிய விசேசங்கள் அல்லது நீ எதிர் பார்க்கும் நபர் வருவதாக சொன்ன நாளுக்கு எத்தனை நாள் உள்ளது போன்ற விபரங்களை மனதின் நுனியில் வைத்திருப்பாய். கடிகாரம் பார்க்கத்தெரியாவிட்டாலும் அவ்வப்போது நேரம் யாரிடமாவது கேட்டுத் தெரிந்துகொள்வாய்.

      உன்னிடம் சில விசித்திர குணங்கள் உண்டு. உனக்கு சாப்பிட கொடுக்கும்போது அதில் கொஞ்சம் சிறப்பான உணவு வகை ஏதேனும் இருந்தால் அதை வேண்டாம் என்று சொல்லி விடுவாய். பிறகு அது நிறைய இருக்கிறது என்று சொல்லி வற்புறுத்திதான் உன்னை சாப்பிட வைக்கவேண்டும். சுடுசாத்த்தைவிட பழைய சாதத்தை நீ அதிகம் விரும்புவாய். உனக்குள் ஒரு ரகசிய கொள்கை உண்டு. யாருக்கும் அதிகம் தேவையல்லாத உணவே உனக்கு தேவையான ஒன்றாக இருந்தது. உன் தாழ்வுமனப்பான்னையை எங்களால் சரிசெய்ய முடியாமல் இருந்தது. உனக்காகவே பழைய சாதம் வேண்டுமென்றே செய்து வைப்பதும் உண்டு.
     நீ படித்த படுக்கையாய் ஆவதற்கு முன்புவரை பாத்திரம் கழுவும் வேலையை பிடிவாதமாய் செய்து கொண்டிருந்தாய். அம்மாவிற்கு அதில் கொஞ்சமும் உடன்பாடில்லை அதனால் அதிகம் தண்ணீர் செலவாகிறதென்றும் உனக்கு கண்பார்வை குறைந்ததால் அந்த வேலையை அவ்வளவு சுத்தமாய் செய்வதில்லை என்றும் வயசான காலத்தில் சொன்னால் கேட்க மாட்டேன்கிறாய் என்று அடிக்கடி குறைபட்டுக் கொள்வாள். ஆனாலும் இதெல்லாம் நீ உன் திருப்திக்காக செய்கிறாய் என்பதால் இந்த விசயத்தில் அம்மாவின் புலம்பலை வீட்டில் யாரும் கண்டிகொள்வதில்லை.

      கண்கள்தான் உனக்கு சரியா தெரியாது. காட்ராக்ட் அறுவைசிகிச்சைக்கு பயந்து நீ ஒத்துழைக்க மறுத்து விட்டாய். ஆனால் காது உன்க்கு மிக துல்லியம். எவ்வளவு மிதமாக பேசினாலும் அதை சரியாக கிரகித்து உபரிதகவல்களை அவ்வப்போது தனியாக என்னிடம் கேட்பாய். ஒரு விசயத்தில் நான் உன்னை கொடுமை படுத்தியிருக்கிறேன். நீ புகையிலை வேண்டுமென்று கெஞ்சுவாய். சரி பரவாயில்லையென வாங்கி கொடுத்தால் அதை வாங்கி சாப்பிட்டுவிட்டு சுயநினைவின்றி மயங்கி கிடப்பாய். அதனால் வீட்டில் மற்றவர்களுக்கு இடர்பாடுகள் ஏற்படுவதால் அதன்பிறகு புகையிலை வாங்கி தருவதில்லை. இன்னமும் புகையிலை போடும் விருப்பம் இருந்துகொன்டேதான் இருக்கிறது.

     நீ ஒரு வருடம் இங்கே அம்மா அப்பாவிடமும் ஒரு வருடம் சித்தப்பா சித்தியிடமும் மாறி மாறி பராமரிப்பதாக ஒரு ஒப்பந்தம் இருக்கிறது. உனக்கு இங்கு இருப்பதில்தான் அதிகம் விருப்பம். இப்போது உனக்கு நினைவு தப்பி விட்டது. உன்னுடை விருப்பு வெறுப்பு பற்றியெல்லாம் உனக்கு பிரக்ஞையே இல்லை. இப்போது நீ சித்தப்பா வீட்டில் இருக்கிறாய். இங்கு கடைபிடிக்கும் ஒழுங்குகள் எத்தனையோ எனக்கு ஒழுங்குகளாய் தெரிவதில்லை. என் உதிராத கண்ணீரெல்லாம் கோபமாக மாறிக்கொண்டிருக்கிறது. எனக்கு உறவுகளின்மீதான நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்துகொண்டே வருகிறது. மெது மெதுவாய் என்னை அனாதையாய் உணரத்தொடங்கிவிட்டேன் அப்பத்தா… உறவுகளின் பினைப்புகள் அறுந்துகொண்டு வருவதை, இப்பூமியில் மானுடம் செய்த எத்தனையோ தவறுகளை வேடிக்கை பார்ப்பதுபோல் இதையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறேன். நீ சித்தப்பா வீட்டிக்குச் சென்றதாய் கேள்விப்பட்ட அன்று என் கடைசி காலங்களில் நானாகவே ஒரு முதியோர் இல்லத்திற்கு சென்று விடவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். உன்னை நான் திரும்ப எப்போது பார்ப்பேன் என தெரியவில்லை. உனக்கு உதவ முடியாத்தற்கு மன்னித்துவிடு…

      நீ இறந்தபிறகு அழுது கொண்டாடுவார்கள். எனக்கப்போதெல்லாம் கோபம்தான் வரும். உன் வாழ்வில் உனக்கு உதவ முடியாத நான் சாவிற்கு வந்து என்ன பயன். கடைசியாக ஒரு ரகசிய விருப்பம் உனக்கே தெரியாத ஒரு திடீர் நொடிப்பொழுதில் நீ இறந்துபோவது நிகழவேண்டும் அதுவும் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவில்.

      உன்னிடம் இன்னும் என்னன்னவோ சொல்லனும்போல் இருக்கு, முக்கியமா நான் உணர்வறிந்து வாழ தொடங்கி எத்தனையோ வருடங்களில் தாத்தா இறந்தபிறகான நாட்களில் உன்னை தொட்டு அரவனைத்து, தலையை கோதிவிட்டு, எப்படியாவது சிரிக்கவோ நெகிழவோ வைத்த அந்த சொற்ப தருணங்களையே இதுவரையான வாழ்தலில் மிக முக்கியமான அற்புத தருணங்களாகவே நினைக்கிறேன்…

அன்புடன் சபரிநாதன்.