Tuesday, May 10, 2011

தேவதை காலங்கள்…



ஒவ்வொருவருக்கும்
எப்போது தொடங்குகிறதென்று
துல்லியமாய் தெரிவதில்லை…

சிலருக்கு பதினாறின் தொடக்கத்திலோ
அல்ல பின்வரும் சில வருடங்களிலோ
ஒரு ஆசிர்வதிக்கப்பட்ட நாளில்
துவங்குகிறது…

ஆரம்பத்தில்
கொஞ்சம் தயக்கங்களும்
பயங்களும் இருந்தாலும்
பின் அதிசயிக்கிறாள்
தேவதை காலங்கள்
தொடங்கியது கண்டு…

ஆண்களின் உலகிற்கு
தானே அச்சாணியாய் இருப்பது
அவளுக்கு சந்தோஷமாய் இருக்கிறது…

செல்லுமிடமெல்லாம்
அவளுக்கொரு முக்கியத்துவம்
கிடைக்கிறது…

அதை
பலமுறை அவளாகவே
பரிசோதனை செய்து
உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறாள்…

அவள் சராசரி பெண்ணல்ல என்றும்
அவளிடம் ஏதோவொரு விஷேச தன்மை உள்ளதென்றும்
அவளால் உணரமுடிந்தது…

அந்த உண்மையை
அவளைத் தேடிவந்த
அவள் மறுத்த
பதிமூன்று காதல் விருப்பங்கள்
உறுதிப்படுத்தின…

அவளைத் தேடிவந்த
ஒவ்வொரு காதலையும்
அவள் விளையாட்டாகவே
எதிர்கொண்டாள்…

எந்த ஒரு அன்பையும்
புறக்கணிக்க மனமில்லையெனினும்
எல்லாவற்றையும்
புறக்கணிக்கவே செய்தாள்…

எல்லா காதலையும்
அவள் நியாயமான காரணத்திற்க்காகவே
மறுத்தாள்…

சிலருக்கு தகுதியில்லை…
சிலரை அவளுக்கு பிடிக்கவில்லை…
சிலரை பிடித்திருந்தும் சமூக காரணங்களால் ஏற்க முடியவில்லை…
சிலரிடம் போதுமான பொறுமையில்லை… அவசரப்பட்டார்கள்…
சிலர் மறுத்ததால் அவளை காயப்படுத்தினார்கள்…
சிலரோ மறுத்தபிறகும் அவளைத் தொந்தரவு செய்து நோகடித்தனர்…

பிடித்த காதலை ஏற்கமுடியாதபோதும்
பிடிக்காத காதலை மறுத்தபோதும்கூட
அவளுக்கு வருத்தமாகவே இருந்தது…

அவளிடம் வந்த எல்லா காதலையும்
அவள் மென்மையாகவே நடத்தினாள்
அதுவே அவளுக்கு மிகவும் தொல்லையாக இருந்தது…

அவள் காதலை மறுக்கும்போது
யாருமே அதை முழுமையாய்
நம்பவில்லை…

நம்பும்படியாக
மனதை கஷ்டப்படுத்தாது
காதலை எப்படி மறுப்பதென்பது
கடைசிவரைக்கும்
அவளுக்குத் தெரியவேயில்லை…

ஒவ்வொரு காதலிலிருந்தும்
தப்பிச் செல்வதை
வேதனை அனுபவமாகவே
உணர்ந்தாள்…

காதலை நல்லனுபவமாய் அவளுக்குத் தர
எந்த ஒரு தேவகுமாரனாலும் முடியவில்லை…

அவள் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள்
எப்போது முடியும் ‘அவளது தேவதை காலங்கள்’ என…

அவளுக்கு மிகவும் அயர்ச்சியாய் இருந்தது
அவளது தேவதை காலங்கள்…